ஹரியானா தேர்தல்; வினேஷ் போகத் வெற்றி - பாஜக வரலாற்று சாதனை
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
வினேஷ் போகத்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இவர், அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸில் இணைவு
இந்த சம்பவம் இந்தியர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் விவாதத்தை கிளப்பியது.
கடந்த மாதம், மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் காங்கிரஸில் இணைந்தனர்.
வினேஷ் போகத் வெற்றி
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதி வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த இவர், 12 மணியளவில் பின்னடைவை சந்தித்தார்.
அதன் பின் மீண்டும் முன்னிலை பெற்ற இவர், 5 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 50 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. ஹரியானா தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்த கட்சியும் தொடர்ந்து 3 வது முறை ஆட்சி அமைத்ததில்லை.