தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! இளவரசர் ஹரியின் மனைவி மேகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் திருமணம் செய்துகொண்டு, பெரிய கனவுகளுடன் ராஜ குடும்பத்துக்குள் கால் வைத்த மேகன், அங்கு அனுபவித்த மனோரீதியான தனிமை மற்றும் வெறுமை காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்துக்கு ஆளானதாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி, சில மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சிகளில் வெளியானது. அதில் பல அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார் மேகன்.
அவற்றில் ஒன்று, தான் வாழ விருப்பமின்றி தற்கொலை செய்து கொள்ள விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளது! நான் அதை என் கணவர் ஹரியிடம் கூற எனக்கு வெட்கமாக இருந்தது, ஆனால், அதை நான் அவரிடம் சொல்லாமலிருந்திருந்தால், நான் தற்கொலை செய்துகொண்டிருப்பேன், நான் வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளார் ஹரியின் மனைவியான மேகன்.
மனோரீதியாக உணர்ச்சிவசப்பட்டு தான் நொறுங்கிப்போகக்கூடியவள் என்பதை ஹரி அறிந்திருந்ததாலேயே, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஹரி தன் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் மேகன்.
மருத்துவ ஆலோசனைக்காக மருத்துவர்களை தேட அவர் முயன்றபோது, அதனால் ராஜ குடும்பத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறித்த கவலை காரணமாக, அவரது முயற்சி அரண்மனை அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் மேகன். மொத்தத்தில், தான் கென்சிங்டன் அரண்மனையில் ஒரு கைதியைப் போல இருந்ததாக கூறியுள்ளார் மேகன்.