கோவையை அதிர வைக்கும் பாலியல் புகார்கள் : அரசு கல்லூரி பேராசிரியர் மீது புகார்
கோவையில் அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது இந்திய மாணவர் சங்கத்தினர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த வாரம் 12ஆம் வகுப்பு மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் மாணவர்கள் அமைப்பினர் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் மற்றுமொரு பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ரகுநாதன் என்பவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் பேராசிரியர் ரகுநாதன் பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவிகளை குறி வைத்து அவர்களிடம் எளிதாக அத்துமீறி பேசி வந்துள்ளார்.டேட்டிங் போகலாம்... காரில் செல்லலாம்... எனக்கு மனைவி இல்லை... பணம் நிறைய இருக்கு... நீ என்னை திருமணம் செய்துகொண்டால் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றெல்லாம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்தும் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டபட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.