நிரந்தர கைதியாக மாறும் ஹரி நாடார் - போலீசுக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு
பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் அந்த கடிதத்தில், கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் spl cc no. 822 of 2021 வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறேன் என்றும், தானும், மனைவி ஷாலினியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் ஷாலினியிடம் இருந்து முறையாக பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் HMOP.No.2124/2020 விவாகரத்து வழக்கு பதிவு செய்து விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. ஷாலினியும் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். நான் சிறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை பனங்காட்டு படை கட்சி தலைமையின் சார்பில், நான் சிறையில் இருந்து வெளிவர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.
ஆனால் அதற்கு மாறாக நான் சிறையில் இருந்து வெளியே வராமல் தடுப்பதற்காக அனைத்து பல முயற்சிகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது என்பதனை எனது வழக்கறிஞர் மூலம் நான் அறிவேன். என்னை கைது செய்த நாள் முதல் இன்று வரை நான் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என எனக்கு நன்கு அறிமுகமான மலேசியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சு என்பவர் எனக்கான சட்ட உதவிகளை எனது அனுமதியுடன் முறையாக கவனித்து வருகிறார்.
ஷாலினி தங்களிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும், அதில் மஞ்சு என்பவர் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி அவருடன் வைத்திருப்பதாகவும், என்னை மஞ்சுவிடம் இருந்து மீட்டுத் தரும்படியும் புகார் மனுவில் கூறி இருப்பதாக எனது வழக்கறிஞர் என்னை நேரில் சந்தித்து விளக்கி கூறினார். ஷாலினி அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் எந்த ஒரு உண்மையும் இல்லை. எனது பணம், நகை மற்றும் சொத்திற்காக மட்டுமே அவர் என்னிடம் மனைவியாக நடிக்கிறார் என நாளடைவில் நான் தெரிந்து கொண்டேன்.
இந்த வழக்கில் விவாகரத்து எனக்கு கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு என்னையும் மலேசியாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணையும் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கி வருகிறார்.
நான் சிறையில் இருந்து வெளி வரக்கூடாது, விவாகரத்து வழக்கில் எனக்கு நீதி கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு பனங்காட்டு படை கட்சியின் தலைமையுடன் கூட்டாக சேர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ஷாலினி இந்த புகாரை அளித்துள்ளார் என கடிதத்தில் ஹரி நாடார் கூறியுள்ளார்.
இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.