என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்... ஹரி நாடாருக்காக சண்டையிட்டு போலீசில் புகார் கொடுத்த இரு மனைவிகள்
தன்னை ஹரி நாடாரின் மனைவி என்று சொல்லிக்கொள்ளும் மலேசியா பெண் மஞ்சுவிடமிருந்து தன் கணவரை மீட்க வேண்டும் ஹரி நாடாரின் மனைவி ஷாலினி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் நடமாடும் நகைக்கடை என்று ஹரி நாடார் அழைக்கப்படுகிறார். தற்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ளார்.
கடந்த 8 மாதங்களாக சிறையில் இருக்கும் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஹரி நாடாரை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்பவர் யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில், “எனக்கும் ஹரி நாடாருக்கும் சட்டப்படி திருமணம் ஆகவில்லை. ஆனால் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு முதல் மனைவியை (ஷாலினி) விவகாரத்து செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறார். விரைவில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
இங்கு நான் மனைவி என்று என்னை குறிப்பிட காரணம், எங்களுக்குக் குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயே என்னை மனைவி என்று ஹரி நாடார் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தில்கூட அவருடைய மனைவி என்று என்னைத்தான் கையெழுத்திட அழைத்தார்கள். ஹரி நாடாரின் வாழ்க்கையில் நான் இருக்கிறேன். அது எல்லோருக்கும் தெரியும்..” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஹரி நாடார் எனக்குதான் சொந்தம் என்றும் அவரது முதல் மனைவி ஷாலினி திருநெல்வேலி எஸ்.பி.யிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அப்புகாரில், “கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது தனக்கும், ஹரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு, சென்னை சென்ற ஹரி நாடார் பைனான்ஸ் தொழிலில் கோடி கணக்கில் பணம் சம்பாதித்தார். இதனையடுத்து, வசதி வாய்ப்பு வந்ததும் என்னையும், என் மகனையும் மறந்து விட்டார்.
அவருக்கும் மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை கைது செய்யும்போது, மஞ்சுவை ஹரி நாடாரின் மனைவி என்று தவறாக எண்ணி கொண்டனர்.
இதனால், பெங்களூர் சிறையில் ஹரியை நான் பார்க்க சென்றபோது என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, மஞ்சுவிடமிருந்து என் கணவர் ஹரியை பிரித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருக்கிறார்.
ஹரி நாடார் சிறையில் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் பெரிய பரபரப்பாகி இருக்கிறது.