கட்சியிலிருந்து ஹரி நாடார் நீக்கம் - ராக்கெட் ராஜா அறிவிப்பின் பின்னணி என்ன?
பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரி நாடார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், ஹரி நாடார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அவர் ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்த பிறகு ஆளே மாறிப்போனார்.
கை, கழுத்தில் சிறிது நகையுடன் வலம்வரத் தொடங்கிய அவர் ஒருகட்டத்தில் நகைக்கடையையே உடல் முழுவதும் அணிந்த நிலைக்கு மாறிப்போனார்.2019 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாகக் களமிறங்கிய ஹரி நாடார் 4,243 வாக்குகள் பெற்றார்.
அதுவே அவரது முதல் தேர்தல். அதன் பின்னர் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்தார். அதில் 37,724 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.அரசியலில் வலம்வரத் தொடங்கிய ஹரி நாடார், அடுத்ததாக சினிமாவிலும் கால்பதிக்க விரும்பி தானே கதாநாயகனாக நடிக்க படத்துக்கு பூஜை போட்டு திரையுலகத்தினரிடம் பரபரப்பைக் கிளப்பினார்.
இதனிடையே ஹரி நாடார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் பண மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ராக்கெட் ராஜாவின் பெயரைப் பயன்படுத்தி சில இடங்களில் மோசடிகளில் ஈடுபடுவதாக எழுந்த புகார் காரணமாக ராக்கெட் ராஜாவுக்கும் ஹரி நாடாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்குக் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தார்கள்.
அந்த வழக்கு தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவிகள் செய்துவந்திருக்கிறார். அதை நடிகை விஜயலட்சுமியே ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில மாதங்களில் சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை மிரட்டியதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில், நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அந்த வழக்கில் ஹரி நாடாரைக் கைதுசெய்தனர். இந்த நிலையில், பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் அறிவுறுத்தல்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ராக்கெட் ராஜாவின் பெயரைச் சொல்லி பல இடங்களில் தேவையில்லாமல் ஹரி நாடார் மிரட்டியிருக்கிறார். அவரால் தனக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவரை ஒதுக்கியேவைத்திருந்தார். இப்போது கட்சியிலிருந்தும் நீக்கியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.