மும்பை அணியில் விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா - சோகத்தில் வெளியிட்ட வீடியோ
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதன்படி மும்பை அணி ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்பரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்களில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் ஒருவர். அவர் தனது மும்பை அணி உடனான தனது பயணம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் மறக்க முடியாத இந்த இனிமையான நினைவுகளை நான் எனது வாழ்நாள் முழுக்க என்னுடன் சுமந்து செல்வேன். அந்த தருணங்களையும் தான். நட்பு பாராட்டி, பந்தம் ஏற்பட்டு, மக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
பெரிய கனவுகளுடன் இளம் வீரராக அணிக்குள் அடியெடுத்து வைத்தேன். ஒன்றாகவே வென்றோம், ஒன்றாகவே வீழ்ந்தோம், ஒன்றாகவே போட்டியிட்டோம். எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென சொல்வார்கள். ஆனால் ‘மும்பை இன்டியன்ஸ்’ என் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் என அந்த வீடியோவில் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.