விராட் கோலியின் இடம் தான் வேண்டும்... அடம்பிடிக்கும் பிரபல இந்திய வீரர்
விராட் கோலியின் இடம் வேண்டும் என பிரபல இந்திய வீரர் பகிரங்கமாக கேட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான 15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பல வீரர்கள் தங்களது ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வகையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மிக முக்கியமாக கம்பேக் கொடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் புதிதாக உருவான குஜராத் அணியின் கேப்டனாகவும் அவர் அசத்தி வருகிறார். குஜராத் அணி இதுவரை 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
3வது வீரராக களமிறங்கி ஹர்திக் பாண்ட்யா இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 295 ரன்களை குவித்துள்ளார். இதனால் மீண்டும் இந்திய அணியில் பாண்ட்யாவின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவர் கேட்டுள்ள பேட்டிங் இடம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போது 3வது இடத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியிலும் தனக்கு அதே இடம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அத்தகைய இடம் தன்னுடைய கனவு என்றும் பாண்ட்யா கூறியுள்ளார். இந்திய அணியில் 3வது இடம் என்பது விராட் கோலி களமிறங்கி வருவதாகும்.
ஆனால் கோலி ஐபிஎல் சீசனில் சொதப்பி வருவதால் கோலி - ஹர்திக் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.