பந்து வீச்சுக்கு தயாரான ஹார்திக் பாண்ட்யா - இந்திய அணியை பலப்படுத்தும் தல தோனி
இந்திய அணிக்கு 6வது பந்துவீச்சாளர் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானுடனான தோல்வி தான்.
நடந்து முடிந்த போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்கள் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக டாப் ஆர்டர் மிக மோசமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தோல்விக்கு இந்தியாவின் பந்துவீச்சும் முக்கிய காரணம்.
150 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இந்திய பவுலர்களால் எடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் போது திடீர் திருப்பங்களை கொண்டு வர 6வது பவுலர் தேவை என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன.
ஹர்திக் பாண்ட்யா பந்துவீசாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட வேண்டும் எனக்கோரப்பட்டது.
இதனையடுத்து ஹார்திக் பாண்ட்யாவுக்கு பிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது அவர் சிறப்பாக பந்துவீசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது பந்துவீச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும் சிறப்பாக பந்துவீசினார். உடல் அளவில் எந்தவித பிரச்னைகளும் அவருக்கு இல்லை எனத் தெரிகிறது.
எனவே அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் குறைந்தது 2 ஓவர்களாவது ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி நடைபெறுகிறது.
மீண்டும் ஹார்திக் பாண்ட்யாவை களத்தில் களமாட தல தோனி ஆர்வம் காட்டி வருவதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.