மருத்துவமனையில் ஹர்திக் பாண்ட்யா...அதிர்ச்சியில் ரசிகர்கள் :
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் நிலைமை குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே அதனை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா (0), ராகுல் 3 (3), சூர்யகுமார் யாதவ்(11) போன்றவர்கள் ஏமாற்ற, கேப்டன் விராட் கோலி 57 (49), ரிஷப் பண்ட் 39 (30) சேர்த்து அணியை மீட்டனர். இவரைத் தொடர்ந்து களம் கண்ட ஜடேஜா(13), ஹர்திக் பாண்ட்யா(11) என ரன் குவிக்காமல் ஏமாற்றினர்.
இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 2 வருடங்களாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி வந்த போதும் அவருக்கு நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் நேற்றைய போட்டியில் முழு நேர பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் 8 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆவதற்கு முன் பவுன்சர் பந்து மூலம் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் களத்திலேயே அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். மேலும் ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஹர்திக்கின் நிலைமையை பார்க்கும் போது அடுத்த போட்டியில் இருந்து அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டது. இதனால் 31 ஆம் தேதி நடக்கும் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் அவர் களமிறங்க மாட்டார் என்று முதலில் தகவல் பரவியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் சிகிச்சைக்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.