நாங்க ஏன் மேட்ச்-ல ஜெயிக்கலைன்னு தெரியுமா? - ஹர்திக் பாண்ட்யா சொன்ன விளக்கம்
மும்பை அணிக்கெதிரான போட்டியில் குஜராத் அணி ஏன் தோற்றது என அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 43, இஷான் கிஷன் 45 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் வந்த டிம் டேவிட் 44 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா 55, சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தாலும் பின்னால் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த ஓவரை மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போட்டியில் தாங்கள் தோற்றதுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில் 6 பந்துகளில் 9 ரன்கள் என்பது எங்களால் எளிதில் அடிக்க கூடிய ரன் தான். ஆனால் முக்கியமான நேரத்தில் இரண்டு ரன் அவுட்கள் ஆனது தோல்விக்கான காரணமாக அமைந்து விட்டது.
டி20 போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியமானது. விக்கெட்டுகளை இழப்பது அந்த போட்டியை முழுவதுமாக மாற்றிவிடும். நாங்கள் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினோம். ஆனால் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது போட்டியின் முடிவு மாறிவிட்டது என பாண்ட்யா தெரிவித்துள்ளார்.