தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய (TNEB) தலைமையக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் மின்மாற்றிகள் வாங்குதல் தொடர்பான முக்கிய மின்னணு தகவல்கள் அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
காகித ஆவணங்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில், மின்னணு ஆவணங்கள் மட்டும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
அலுவலகத்தில் குறைந்த பணியாளர்கள் இருந்த வார இறுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து 8 உதவிப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10வது மாடிகளில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருடப்பட்ட டிஸ்க்குகளை கண்டறிய ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமையகத்தில் முக்கிய பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.