களத்தில் சண்டை போட்ட ஹர்பஜன் சிங் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் : 14 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உடனான கள வார்த்தை மோதல் குறித்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் பங்கேற்றது. இதில் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
ஹர்பஜன்சிங் தம்மை “குரங்கு” என திட்டியதாக ஆன்ட்ரூ சைமன்ஸ் புகார் தெரிவிக்க அந்த போட்டி முடிந்த பின் இதுகுறித்து ஐசிசி விசாரணை மேற்கொண்டு அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிரடியாக தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ தடையை நீக்காவிட்டால் நாங்கள் அந்த டெஸ்ட் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்புகிறோம் என பதிலடி கொடுக்க தடை திரும்ப பெறப்பட்டது.
இதனிடையே இந்திய கிரிக்கெட் வல்லுனர் “போரியா மஜும்தார்” உடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜனிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆண்ட்ரூ சைமன்ட்ஸை ஒரு சில இந்தி கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் ஆனால் அதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் களத்தில் விளையாடும் போது “உனது தலையில் விதைகள் உள்ளது” என என்னை பார்த்து எனது மதத்தை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேசினர். இதனால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் அவர்களுக்கும் ஏற்பட வேண்டாம் என நினைத்தேன். அதனால் அந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்ற அப்போது நினைக்கவில்லை என ஹர்பஜன் சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.