ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ - 17 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டது ஏன்?
17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐபிஎல் - 2008
2008-ம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையேயான போட்டியின் போது,
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்தார். களத்திலேயே ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அப்போது ஒளிபரப்பானாலும், ஹர்பஜன் அறைந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போட்டி முடிந்துவிட்டது.
வெளியான வீடியோ
ஒளிபரப்பு கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டன. ஆனால், எனது பாதுகாப்பு கேமராக்களில் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. அதில் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையேயான அந்தச் சம்பவம் பதிவானது. இத்தனை ஆண்டுகளாக நான் இதை வெளியிடவில்லை.
இப்போது 18 ஆண்டுகள் கடந்துவிட்டன" என குறிப்பிட்டுள்ளார். அதில், போட்டி முடிந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் கைகுலுக்கி செல்லும் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை வேகமாக அறைந்து விட்டு செல்கிறார்.
அப்போது ஸ்ரீசாந்த் அழுததோடு மீண்டும் ஹர்பஜனை நோக்கி பேசுகிறார். ஜெயவர்தனே ஓடி வந்து ஸ்ரீசாந்தை சமாதானம் செய்ய முயல்கிறார். அப்போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை நோக்கி மீண்டும் ஆவேசமாக ஓடி வருகிறார்.
பாதுகாவலர் மற்றும் இர்பான் பதான் குறுக்கே வந்து ஹர்பஜன் சிங்கை சமாதானம் செய்து அழைத்து செல்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.