இங்க பாருங்க... இதோடு நிறுத்திக்கோங்க.. அவர் குற்றவாளி கிடையாது... - ஹர்பஜன் சிங் விளாசல்...!
கே.எல்.ராகுலின் தொடர் சொதப்பல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார்.
கே.எல்.ராகுல் திருமணம்
சமீபத்தில் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமணம் செய்தார். சுனில் ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கும் அவரது மகள் அதியா ஷெட்டிக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்தார். விராட் கோலி, கே.எல் ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வழங்கினார். எம்.எஸ். தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் விளையாடி இருக்கிறார். வெறும் 20,15,1 என்று மோசமான ரன்களில் அவர் அவுட்டானார். சமீப காலமாக அனைத்து வடிவ போட்டிகளிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கு இனி வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், கே.எல்.ராகுலை பகைத்துக்கொண்டால் ஐபிஎல்-ல் பயிற்சியாளர், ஆலோசகர் பதவிகள் கிடைக்காது என்பதால் யாருமே வாய்திறக்கவில்லை என்று அவர் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்பஜன் சிங் விளாசல்
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கே.எல்.ராகுலை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் ஒன்றும் குற்றவாளி இல்லை. அவர் குறித்து மேலும் மேலும் பேசி அழுத்தத்தை ஏற்படுத்தாதீங்க. கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கடினமான சூழல்களை எதிர்கொண்டிருப்போம். ஃபார்ம் அவுட்டாகும் முதல் வீரரும் அவர் கிடையாது. கடைசி வீரரும் அவர் இல்லை. கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர். நம் நாட்டிற்காக தான் அவர் விளையாடுகிறார் என்பதை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ராகுல் டிராவிட் ஏற்கனவே தனது முடிவை கூறிவிட்டார். அதில் அயல்நாட்டு களங்களில் கே.எல்.ராகுலின் சராசரி ரன்கள் சிறப்பாக இருப்பதால், அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Can we leave @klrahul alone guys ? He hasn’t done any crime.He is still a top player. He will come back strong.we all go thru such patches in international cricket.he is not the first one and last one. so please respect the fact that he is our own ?? player and have faith ?
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 21, 2023