காரணமே இல்லாமல் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க; ஹர்பஜன் சிங் வேதனை !!
31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தனக்கு அதன்பின்னர் ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று இன்று வரை தெரியவேயில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
1998லிருந்து 2016ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின்.
236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடைசியாக 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், அதன்பின்னர் 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 2015ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடினார். அதன்பின்னர் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்ட ஹர்பஜன் சிங், தான் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், எனது 31வது வயதில் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினேன்.
31 வயதில் 400 விகெட்டுகள் வீழ்த்திய என்னால், அடுத்த 8-9 ஆண்டுகளில் குறைந்தது 100 விக்கெட்டுகளாவது கூடுதலாக வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் அதன்பின்னர் என்னை அணியிலேயே எடுக்கவில்லை.
400 விக்கெட் வீழ்த்திய ஒரு வீரர் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் மர்மமாகவே இருப்பது ஆச்சரியம்.
இன்று வரை என்னை ஏன் ஓரங்கட்டினார்கள் என தெரியவில்லை. இதற்கு யார் காரணம்? பின்னணியில் இருந்தது யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியவேயில்லை.
நானும் எத்தனையோ முறை கேப்டன் தோனியிடம் கேட்டு தெரிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால் எனக்கு தெரியப்படுத்தப்படவே இல்லை.
இனிமேல் கேட்டும் பிரயோஜனமில்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்றார் ஹர்பஜன் சிங்.