தோனிக்கு தலைவலியாக மாறும் ஜடேஜா...முன்னாள் வீரர் கருத்தால் சர்ச்சை
சென்னை அணியின் தொடர் தோல்விகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன்களான சென்னை அணி விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவியது.
சொல்லப்போனால் சென்னை அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக மாறி விட்டது என்றே கூறலாம். கேப்டன்சி மாற்றம், அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லாதது, நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது என அந்த அணி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இதனால் சென்னை அணியின் தோல்வி குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், என்னதான் சென்னை அணியின் கேப்டன் மாற்றப்படாலும் களத்தில் இப்போதும் தோனி தான் கேப்டனாக செயல்படுகிறார். ஜடேஜா தனக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லாததை போன்று பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து வருகிறார்.
அங்கு நின்றால் யாராலும் அணியை வழிநடத்த முடியாது. இதனால் ஜடேஜாவால் தோனிக்கு தான் தேவையற்ற தலைவலி ஏற்படுகிறது. அவரது வேலையை வேறு வழியின்றி தோனி செய்கிறார். ஜடேஜா அதீத நம்பிக்கையுடைய வீரர் என்பதால் அவரால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். ஜடேஜா அதற்கு துணிந்து முன்வந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.