கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ஹர்பஜன் சிங் - அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா?
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் கொடிகட்டி பறந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்த இவர் இந்திய லெஜண்ட் ஆஃப் ஸ்பின்னராக அழைக்கப்படுகிறார்.
இந்திய அணிக்காக கடந்த 1998ம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன் சிங், இதுவரை டெஸ்டில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். எனினும் இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வரும் அவர் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் பங்கேற்க போவதில்லை என்றும் 41 வயதாகும் ஹர்பஜன் அடுத்ததாக பயிற்சியாளர் அவதாரம் எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னணி ஐபிஎல் அணி ஒன்றில் ஹர்பஜன் சிங் ஆலோகராக, அல்லது பயிற்சியாளர் குழுவில் இணையவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஹர்பஜன் சிங்கின் ஓய்வு முடிவு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.