“எப்படி ரன் எடுக்குறதுன்னே நம்ம பேட்டர்ஸ் மறந்து போயிட்டாங்க போல..ஆட்டத்தலாம் பாத்தா அப்படி தான் தெரியுது” - ஹர்பஜன் சிங்

virat kohli harbajan singh ravi shastri captaincy issue
By Swetha Subash Jan 27, 2022 07:04 AM GMT
Report

டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது இந்தியளவில் பேசு பொருளானது.

கோலியின் விலகல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ள கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார்.

ரவி சாஸ்திரி, "இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்திருந்தால் சொந்த மண்ணில் இந்தியா விளையாடவிருந்த 50 முதல் 60 போட்டிகளில் வெற்றியைப் பெற்றிருப்பார்.

கோலி தன் கேப்டன்சியைத் தொடர்வதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.

இருப்பினும் நீண்ட காலமாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் அவரின் முடிவை மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங்,

"விராட் கோலி இன்னும் தொடர்ந்து விளையாடி 15- இல் இருந்து 20 வரையிலான டெஸ்ட் மேட்ச்களில் இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்று கொடுத்து தன்னுடைய கேப்டன்சியைத் தொடர்வது சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

எனக்கு தெரியவில்லை யாரைக் குறித்து அவர் பேசுகிறார் என்று, யாருக்கு ஜீரணிக்க முடியாமல் போயிருக்கும், ஆனால் நாங்கள் இந்தியர்கள் பெருமிதப்பட்டிருப்போம்.

40 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று அவரை முறியடிக்க இன்னொரு கேப்டன், இரண்டு முறை கேப்டன் ஆக வேண்டி இருக்கும் சூழலை நாங்களும் தான் விரும்புகிறோம்"

"இந்தியாவில் நடைபெறுகிற போட்டிகளில் முடிவு சாதகமாக வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஆமாம், சில தொடர் போட்டிகளில் நீங்கள் அபரிதமாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

ஆனால் நாளை எப்படி இருக்கும் எனக் காலம் தான் முடிவு செய்யும். ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக இருக்கும்போது, முதல் ஓவரில் இருந்து பந்து சுழலும் பரப்பில் இந்தியா விளையாட போவதில்லை.

உண்மையில் சொல்ல போனால் பேட்டிங் செய்பவர்கள் தங்களை நிரூபிக்க களங்கள் கிடைப்பது அரிது"

மேலும், "இந்த கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்தியன் பேட்டர்ஸ் தரவுகளைப் பார்த்தால், அவர்கள் ஸ்கோர் செய்திருக்கும் ரன்கள் பற்றி தெரிய வரும். நமது பேட்டர்ஸ் எப்படி ரன் எடுப்பது என்பதையே மறந்துவிட்டனர்.

பேட்டர்ஸ்க்கு தங்கள் மீதிருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது, ஏனென்றால் அவர்கள் 2-3 வருடங்களாக அதிகளவில் ரன்கள் எடுக்கவே இல்லை.

ரன்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. நீங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் வீரர்கள் வளர்ச்சி பெறவில்லை" எனக் கூறினார்.

இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.