“தோனிக்கு ஜடேஜா தான் சரியான தலைவலியா இருக்கிறார்” - ஹர்பஜன் சிங் காட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருக்கிறார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் கடந்த 26-ந் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சீசனின் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த சீசனில் மிகவும் சொதப்பி வருகிறது.
பிற அணிகளுடன் இதுவரை மூன்று முறை மோதிய சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வி பெற்று, முதல் 3 போடிகளிலும் தோல்வியை தழுவியிருப்பது இதுவே முதல்முறை என்ற சூழலை உருவாக்கிவிட்டது.
முதலில் பேட்டிங் சரியில்லை, பின்னர் பவுலிங்கில் தீபக் சஹார் இல்லாதது, புது முக வீரர்களின் சொதப்பல் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் பிரச்சினையில் சிக்கியுள்ளது சிஎஸ்கே.
இனி விளையாடவுள்ள போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அணி வீரர்கள்.
இந்நிலையில் சிஎஸ்கே தோல்விக்கு கேப்டன் ஜடேஜா தான் காரணம் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பளிச்சென்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனாக பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா ஃபீல்டிங் ரிங்கிற்கு வெளியில் தான் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து ஒரு கேப்டனால் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.
அவரின் இந்த செயலால் தோனிக்கு தான் அவர் தலைவலி கொடுக்கிறார். ஃபீல்டிங் ரிங்கிற்கு உள்ளே நிற்கும் தோனி ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்கிறார். இதை பார்கும்போது தோனி தான் அணியின் கேப்டன் போல் தெரிகிறது.
ஒரு அணியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஜடேஜா கண்டிப்பாக வாயை திறந்து பேசியாக வேண்டும்” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக வரும் ஏப்ரல் 9-ந் தேதி சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.