பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டல் - காமுகனை துாக்கிய போலீஸ்!

Women Bus Lawyer Harassment Govt பெண் வழக்கறிஞர் அரசுப்பேருந்து
By Thahir Apr 04, 2022 09:53 AM GMT
Report

பேருந்துதின்  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் வழக்கறிஞருக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் பெண் வக்கீல் ஒருவர் தனது தாயுடன் வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு பயணம் செய்ய அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கையை நீட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த பெண் வக்கீல் தன்னிடம் இருந்த ஊக்கை வைத்து அந்த நபரை குத்தினார். இதை தனது மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்தார்.

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி புகார் அளித்துள்ளார். இதையடுத்து வானகரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார்.

அங்கு வந்த கோயம்பேடு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது அந்த காமுகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பெயர் ராகவன் என்பதும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காமுகன் ராகவனை சிறையில் அடைத்தனர்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமுகனை தைரியமாக ஊக்கை வைத்து குத்தி படம் பிடித்தற்கு பல்வேறு தரப்பினரும் காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.