நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? - கல்லூரி தாளாளர் தலைமறைவு.. விடுதி காப்பாளர் கைது!
திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாளாளரைக் கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது . இந்தக் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அ.ம.மு.க கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரின் கல்லூரி விடுதியில் 300 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுதி மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரைக் கைது செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல் பழநி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் நர்சிங் கல்லூரி தாளாளரான சுரபி ஜோதிமுருகனை கைது செய்ய வேண்டும் என்றும் தங்களது உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நேற்று இரவும் முத்தனம்பட்டியில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் டிஐஜி விஜயகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். சுரபி ஜோதிமுருகன் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதனிடையே திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கல்வி நிலையங்களில் நடைபெறுவதாக வெளியாகும் பாலியல் புகார்கள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.