புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ : பேரவையில் கலாய்த்த தங்கம் தென்னரசு
மதுரையில் எல்லாரும் மாடுதான் பிடிப்பார்கள் ஆனால் ஆனால் செல்லூர் ராஜூஅண்ணன் புலி வாலையே பிடித்தவர் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
செல்லுர் ராஜூ கேள்வி
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேரவைத்தலைவர் அவர்களே மதுரைக்கு எந்த ஒரு தொழிலும் இல்லை அமைச்சரே மெட்ரோ ரயில் வரும் என்று சொன்னார்கள். எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ ரயில் வந்து என்ன செய்ய? ஒரு தொழிற்சாலை கூட குறிப்பிட்ட அளவுக்கு இல்லை, மதுரைக்கு ஏதாவது ஒரு தொழில் வேண்டும்.

எல்லோரும் பாராட்டும் அளவுக்கு தொழில்துறை அமைச்சர் கொண்டு வர வேண்டும். மதுரை எல்லாம் ஆஹா ஓஹோ என்று நம்முடைய தென்னரசு அவர்களை பாராட்ட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன் என பேசினார்.
தென்னரசு பதில்
செல்லூர் ராஜூவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளபடியே மதுரை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என சொல்லிட்டு இருக்காங்க!. (பேரவையில் சிரிப்பலை) நானே அசந்துபோனேன்! கொஞ்ச நாளுக்கு முன்னாள் ஒரு படம் ஒன்று வந்தது. அண்ணன் என்ன பண்ணாரு நாமெல்லாம் புலியை பார்த்தால் தூர ஓடிப்போவோம். மதுரையில் எல்லோரும் மாடுதான் பிடிப்பார்கள், செல்லூர் ராஜூ அண்ணன் புலி வாலையே பிடித்து வந்து நின்னார்.
ஆனால் ஒன்னு மதுரைக்காரங்க ரொம்ப விவரமானவங்க! புலி வாய் இருக்கும் பக்கமா நிக்காமல் புலி வால் இருக்குற பக்கமா பாத்து அண்ணன் பிடித்து இருந்தார்.
அவ்வுளவு திறமையாக இருக்க கூடிய அண்ணன் அவர்கள் நம் மதுரைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆர்வம் காட்டக்கூடிய காரணத்தால் 1000 கோடியில் மதுரைக்கு டைடல் பார்க்கும் சிப்காட்டும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
இதனால் மதுரை மக்கள் பலன் பெறுவார்கள் என கூறியுள்ளார்.