Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் - பரபரப்பு!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கேரளாவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் 'கலீத் மஷல்' காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது. இதில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 7000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இத்தனை உயிர்களை பலிகொண்ட போரானது இன்னும் முடிவடையாமல் 3வது வாரமாக தொடர்கிறது. இந்த போரில் பல சக்திவாய்ந்த நாடுகள் இஸ்ரேல் பக்கமே நிற்கிறது.
கேரளாவில் ஹமாஸ் தலைவர்
இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர் பிரிவான இளைஞர்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் கேரளாவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் 'கலீத் மஷல்' காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாக கூறப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் கலீத் மஷல் போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் அந்த இயக்கம் சார்பில் சுவரொட்டியாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை அம்மாநில பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது ‛‛மலப்புரத்தில் நடந்த சாலிடாரிட்டி நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர் கலீத் மஷேலின் காணொளி மூலம் உரையாடியுள்ளார்.
பினராயி விஜயனின் கேரள காவல்துறை எங்கே? 'சேவ் பாலஸ்தீனம்' என்ற போர்வையில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை அவர்கள் புகழ்கிறார்கள். அதோடு அதில் இருப்பவர்களை போர் வீரர்கள் என கூறி வருகின்றனர். இதனை ஏற்கவே முடியாது. கேரள மாநில போலீஸாரும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என பதிவிட்டார்.