50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி - முண்டியடித்த மக்கள் கூட்டம்
50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என்று சலுகை அறிவித்த உணவகத்தை நோக்கி வந்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சலுகை அறிவித்த உணவகம்
கரூர் காந்தி கிராமம் பகுதியில் தனியார் உணவகம் துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கொண்டாடும் வகையில் 50 பைசா கொடுத்தால் பிரியாணி என்று அந்த உணவகம் சலுகை கொடுத்தது.

இன்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 50 பைசா கொடுத்தால் அரை பிளேட் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்படும் என்றும் மதியம் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை பிரியாணி கொடுக்கப்படும் என்றும் அந்த உணவகம் அறிவித்தது.
படையெடுத்து வந்த மக்கள்
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமி உட்பட ஏராளமானோர் 50 பைசா எடுத்துக் கொண்டு அந்த உணவகத்திற்கு படையெடுத்து வந்தனர். அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த கடைக்கு உணவு சாப்பிட்ட வந்தனர்.

அந்த உணவகத்திற்கு நூற்றுக்கணக்கானோர் முரண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் எச்சரிக்கை
இது தொடர்பாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரிடம், முன் அனுமதி பெறாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர். போக்குவரத்து சீர் செய்த பிறகு மாலை 3 மணியிலிருந்து 50 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்பட்டது.
