‘புஷ்பா’ பட பாணியில் சீனியரை அரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
கோவை, குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே கல்லூரியில் படிக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது.
கேரளா மாநிலம், ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்டவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது சீனியர்ன்னா பெரிய இவனா நீ... இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம் என்று மிரட்டி அடித்துள்ளனர். மேலும், அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அண்மையில் வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதே போன்று இந்த சம்பவம் நடந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து, குனியமுத்தூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.