ஹைதி நாட்டை நிலைகுலைய வைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 304 பேர் உயிரிழப்பு
ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 304 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
ஹைதியின் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் காரணமாக 304 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி விரைந்துள்ளார். மேலும் நாடு முழுவதும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம் அவர் அறிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் பாதிப்பு தொடர்பாக முழு விவரம் தெரியும்வரை சர்வதேச உதவிகளை கோரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருசில நகரங்கள் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்காவிலும் 6.9 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹைதி நிலநடுக்கத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அர்ஜெண்டீனா, சிலி போன்ற நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

ஹைதியில் கடந்த 2010ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். 2010ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது.
உரிய நேரத்தில் உதவிகள் வந்து சேராதது,மீட்பு நடவடிக்கை தாமதமாகியது ஆகியவற்றின் காரணமாக அப்போதைய நில நடுக்கத்தில் சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.