செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 150 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல் - ஹெச். ராஜா
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரிதுறையினர் நடத்திய சோதனையில் 150 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமரைப் பதவி விலகச் சொல்வது ஏன்?
திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள திருச்சி பாஜக அலுவலகத்தில் பாஜக அரசின் 9 வது ஆண்டு சாதனைகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தபோது செந்தில் பாலாஜியையோ ஸ்டாலினையோ பதவியைவிட்டு ராஜினாமா செய்யச் சொல்லாதவர்கள் எதிர்பாராதவிதமாக நடந்த ரயில் விபத்துக்காக பிரதமரைப் பதவி விலகச் சொல்வது ஏன்?

தண்டனையிலிருந்து தப்ப முடியாது
இந்தியாவில் தொடர்ந்து 34 மாதங்களாக ரயில் விபத்தே நடைபெறவில்லை இது எதிர்பாரதவிதமாக நடந்தது. ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடலை அனுப்பி நிவாரணம் கொடுத்து, 24 மணி நேரத்தில் விபத்துக்குள்ளான ரயில் பாதையைச் சரி செய்திருக்கிறோம்.
மீண்டும் ரயில் சர்வீஸ் ஆரம்பித்துவிட்டது.ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்திலேயே இருக்கிறார். விபத்து நடந்த உடனேயே பிரதமர் சம்பவ இடத்திற்கு சென்றார்.
ராணுவமும் உடனே அங்கே போனது. இதையெல்லாம் விரும்பாதகதவர்கள் தான் இப்போது தேவையில்லாமல் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர் என்றார்.
மேலும் பேசிய அவர், ரயில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பிரதமரும் கூறியிருக்கிறார்.
150 கிலோ தங்கம் கிடைத்திருப்பதாக தகவல்
திமுக சீனியர்கள் யாருமே செந்தில் பாலாஜியை பற்றி வாய் திறப்பதில்லை உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லாமல் ரெய்டுக்குச் செல்லமாட்டார்கள் ஆதாரங்களின் அடிப்படையில் தான் ரெய்டு நடத்திருக்கிறது.

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.
அறிக்கை வந்த பிறகுதான் மற்ற முழு விவரங்கள் எல்லாம் தெரியவரும். ஆடு - புலி புல்லு கதைதான் வரும் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறும். நிச்சயமாக எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பே இல்லை.
மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். FIR போடப்பட்டு விசாரணை செய்த காவலர்கள் குற்றம் சாட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.
இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றார்.