நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் - என்ன பதில் கூறுவார்?
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, திருமயம் உரிமையியம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருமயம் உரிமையியல் , நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜாமீன் கேட்டு அது மறுக்கப்பட்டுள்ள நிலையில் எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் மேடை அமைத்து பேச காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
தடையை மீறி நிகழ்ச்சியை நடத்திய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதம் செய்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல்துறையை கண்டித்ததுடன், உயர்நீதிமன்றத்தையும் இழிவான சொல்லில் விமர்சித்தார் என்று திருமயம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவானது.
அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்து எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மாதத்தில் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின்னர் மூன்று வருடங்கள் ஆகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்கும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மறுபடியும் கோரியிருந்தார் துரைசாமி. இதையடுத்து, ஏப்ரல் 27ம் தேதிக்குள் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது நீதிமன்றம். ஒத்திவைக்கப்பட்டிந்த வழக்கு கடந்த மாதம் 17ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். உடனே, அந்த குற்றப்பத்திரிகையின் நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கின் மறு விசாரணை ஜூன்29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போலீசாரின் குற்றப்பத்திரிகையில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் காரைக்குடியில்தான் உள்ளார் என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு 29.6.2021 அன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செய்தார். இதன் பின்னர் அடுத்த மாதம் 23ம் தேதி முதல் திருமயம் நீதிமன்றத்தில் எச்.ராஜா மீதான வழக்கு விசாரணை தொடங்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரரின் வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டிருந்தார் எச்.ராஜா. அது மறுக்கப்பட்டதால் இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார்.