ஹெச்.ராஜா தோல்விக்கு அவர் மருமகன் தான் காரணமாம்? என்ன கதையா இருக்கும்?
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ஹெச்.ராஜா குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்விக்கு சில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என ஹெச்.ராஜா கொளுத்திப் போட காரைக்குடி பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து, காரைக்குடி பாஜக நிர்வாகிகள் சிலர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை ஹெச்.ராஜா சரியாக செலவழிக்கவில்லை என்றும், பூத் கமிட்டிக்கு கூட அவர் சரியாக செலவிடவில்லை என்றும் அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகிய 3 பேரும் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சந்திரன் , ''விசாரணை செய்ய வந்த மாநில நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். புகார் தெரிவித்த எங்களிடம் விசாரிக்கவில்லை. ஹெச்.ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் மட்டும் விசாரித்தனர். ஹெச்.ராஜாவின் நிர்பந்தம் காரணமாகவே எங்களை நீக்கியுள்ளனர். பாஜவினருக்கு தேர்தல் செலவுக்கு ரூ.13 கோடி தரப்பட்டதாக எஸ்.வி.சேகரின் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு வந்த பணத்தை ஹெச்.ராஜா முறையாக செலவு செய்யவில்லை. ரூ.4 கோடி முறைகேடு செய்துள்ளார். அதில், தனது பூர்வீக வீட்டை இடித்து புதுவீடு கட்ட உள்ளார். 27 ஏக்கர் நிலத்தை வாங்கி தோட்டம், புது வீடு கட்டுகிறார். இந்த பணம் எங்கிருந்து வந்தது? தேர்தலின்போது பணத்தை செலவு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியில் அவரது மருமகன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சூரியநாராயணன் மற்றும் அவரது உறவினர்கள்தான் இருந்தனர்.
தோல்விக்கு முழு காரணம் ஹெச்.ராஜா மற்றும் அவரது மருமகன்தான்'' என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ''அடிமட்ட தொண்டர்களை ஹெச்.ராஜா கெடுக்க நினைக்கும் வரை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல. தமிழகத்திலும் பாஜ வளராது. தாமரை மலரவே மலராது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் அப்படித்தான் உள்ளது. வர உள்ள நகராட்சி தேர்தலில் நான் நிறுத்தும் வார்டு தலைவரை கூட அவர் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது'' என்று
கூறினார்.