jio hotstar டொமைனை வாங்கி அம்பானியிடம் டீல் பேசிய இளைஞர் - ரிலையன்ஸ் கொடுத்த பதில்
jio hotstar டொமைனை வாங்கிய நபர் அதற்கு 1 கோடி தர வேண்டும் ரிலையன்ஸிடம் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் தளம் ஜியோ சினிமா(jio Cinema).
கடந்த பிப்ரவரி மாதம், வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வியாகாம்18 நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. இதற்காக $8.5 பில்லியன் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1 கோடி
இதனையடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஐபிஎல் போட்டிகள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஆஃப் டெவலப்பர் ஒருவர் இந்த ஜியோ ஹாட்ஸ்டார் இணைவை கணித்து jiohotstar.com என்ற டொமைனை வாங்கியுள்ளார்.
தற்போது இந்த டொமைனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க விரும்புவதாக கூறியுள்ள அவர், அதற்கு பதிலாக தனக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசை என்றும் அதற்காக 93345 யூரோ (இந்திய மதிப்பில் ஒரு கோடி) வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
ஆனால் இவரது கோரிக்கையை நிராகரித்த ரிலையன்ஸ் நிறுவனம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அவரிடம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, "ரிலையன்ஸ் எனது கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரிலையன்ஸ் மனது வைத்தால் எனக்கு உதவ முடியும். என்னால் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனத்துடன் மோதும் வலிமை இல்லை.
நான் எந்த வர்த்தக முத்திரை மீறலும் செய்யவில்லை என கூறி உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் தனக்கு உதவுமாறு அந்த நபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சட்ட ஆலோசனை
இந்நிலையில் தற்போது, தனது jiohotstar.com தளத்தில் மற்றொரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், "தனக்கு சட்ட ஆலோசனை கூறிய அனைவர்கும் நன்றி. நான் இந்த டொமைனை வாங்கியதில் எந்த சட்ட விரோதமும் இல்லை. நான் இந்த டொமைனை வைத்து அதற்காகப் போராட வேண்டும் என்று பல சட்ட வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
டொமைன் என்பது ஒரு சொத்து போன்றது. எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்றை வாங்கி வைப்பதில் எந்த தவறும் இல்லை. ரிலையன்ஸின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது ஜியோ அல்லது ஹாட்ஸ்டார் சார்பாக எதையாவது விற்க முயற்சிக்கவில்லை.இந்த டொமைனைப் பயன்படுத்துவதிலிருந்து என்னைத் தடுக்கலாம் அல்லது இந்தத் தளத்தை ஆன்லைனில் வைத்திருக்கலாம், ஆனால் டொமைனைக் கைவிடும்படி கட்டாயப்படுத்த முடியாது.
ரிலையன்ஸ் போன்ற ஒரு பெரிய குழுவிற்கு எதிராகச் செல்ல எனக்கு நேரமும் ஆதாரமும் இல்லை. எனக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் வந்தால், நான் இணங்க வேண்டும். இதற்காக அவர்கள் ஒரு பைசா கூட கொடுக்காமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவர்கள் இதற்கான தொகையை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.