நாம் தமிழர் சீமான் மீது பாயும் குண்டாஸ் - இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து
கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் சாத்தான்களின் பிள்ளைகள் என நாம் தமிழர் சீமான் விமர்சித்துள்ள நிலையில், அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
சீமான் சர்ச்சை பேச்சு
மணிப்பூர் கலவரத்தில் குக்கி இனமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மக்களை சாத்தானின் பிள்ளைகள் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பல கட்சி தலைவர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. பல முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ மதங்களை சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை சீமானுக்கு தெரிவித்து வந்தனர்.
நடிகர் ராஜ்கிரண் சீமானை விமர்சனம் செய்து முகநூலில் தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போன்றோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
இந்நிலையில், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இத்ரீஸ் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.