முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ்

Government Of India
By Thahir Jan 12, 2023 04:50 PM GMT
Report

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கைத்துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமது நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு 

கடந்த ஆண்டு மே மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இவரின் பேச்சுக்கு இந்தியா மட்டுமின்றி வளைகுடா நாடுகளிலும் கடும் கண்டனம் எழுந்தது.

சர்வதேச அளவில் முஸ்லிம் நாடுகள் நுபுர் சர்மாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டன. அவரின் கருத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதையடுத்து தனது கருத்துகளைத் திரும்பப் பெறுவதாக ட்விட்டரில் நுபுர் சர்மா அறிக்கை விட்டார். அத்துடன் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ் | Gun License For Nubur Sharma

இந்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ் 

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அவர் நாடி இருந்தார். அவரது கருத்தால் நாட்டில் அப்போது நிலவிய சூழல் காரணமாக அவரை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

இந்நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் டெல்லி போலீஸார் பாதுகாப்பு அளித்திருந்தனர். இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கைத்துப்பாக்கி வேண்டி நுபுர் சர்மா விண்ணப்பித்திருந்தார்.

அதன்பேரில் தற்போது அவருக்கு கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என டெல்லி போலீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.