ஹே எப்புட்றா..? 200-க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி - இப்படியும் ஒரு பள்ளியா?
4-ம் வகுப்பு மாணவி ஒருவர் 200-க்கு 212 மதிப்பெண் பெற்ற சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பெண் குளறுபடி
குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வன்ஷிபன் மணிஷ்பாய் என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
அதில் வன்ஷிபன் மணிஷ்பாய் என்ற மாணவி மொத்தம் 1000 மதிப்பெண்களுக்கு 956 மதிப்பெண் பெற்றுள்ளார். அதில், நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களை விட குஜராத்தி மொழிப் பாடத்தில் 200-க்கு 211 மதிப்பெண்ணும், கணிதத்தில் 200-க்கு 211 மதிப்பெண்ணும் மாணவி பெற்றது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பெற்றோர் அதிர்ச்சி
இதனை பார்த்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுதொடர்பான மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் சிறந்த பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் கல்வியின் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.