பெற்ற மகளை 3 நாட்கள் பட்டினிப் போட்டு நரபலி கொடுத்த கொடூரத் தந்தை - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
குஜராத் மாநிலத்தில் பெற்ற மகளையே நரபலி கொடுத்த தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண நெருக்கடியில் சிக்கித் தவிப்பு
குஜராத் மாநிலம், சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவேஷ் அக்பரி. இவருக்கு தாரியா (14) என்ற மகள் உள்ளார். தாரியா 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பவேஷுக்கு , தாந்திரக மந்திர வேலைகளில் ஈடுபாடு அதிகம் இருந்து வந்தது. சில நாட்களாக பண நெருக்கடியில் பவேஷ் சிக்கித் தவித்து வந்தார்.
இதனையடுத்து, கடன் மற்றும் வீட்டு பிரச்னைகளை தீர்க்க பவேஷுக்கு அவரது மூத்த சகோதரர் திலீப் ஒரு விபரீத யோசனை அளித்துள்ளார். தாரிகாவிற்கு பேய் பிடித்துள்ளதால்தான் வீட்டிற்கு இவ்வளவு பண நெருக்கடி வந்துள்ளது. எனவே, தாரியாவை நரபலி கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனால், பவேஷ், தாரிகாவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.
பட்டினி போட்டு நரபலி கொடுத்த கொடூரம்
பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 6 நாட்கள் விதவிதமான முறையில் தாரிகாவிற்கு பூஜை சடங்கு செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். பூஜையில், 2 மணிநேரம் நெருப்பின் முன் நிற்க வைத்தும், பேய் ஓட்டுவதாக கூறி, கம்புகளால் தாரிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, தாரிகாவை நரபலி கொடுப்பதற்காக காட்டிற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் கட்டிபோட்டு 3 நாள்கள் உணவு தராமல் பட்டினி போட்டுள்ளனர். சிறுமி சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவளின் வாய் மற்றும் கண்களை துணியால் இறுக்கி மூடி இருட்டு காட்டிலேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். 3 நாட்கள் பட்டினி கிடந்த தாரிகா கடந்த 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை கைது
இதனையடுத்து, உயிரிழந்த தாரிகாவை அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் தந்தை பவேஷ், பெரியப்பா திலீப் எரித்துள்ளனர்.
தாரிகா உயிரிழந்த சம்பவத்தை சிறுமியின் தாய் வீட்டாருக்கு பவேஷ் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த தாரிகாவின் தாத்தா, போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர். அப்போது, தாரிகாவை பெற்ற தந்தையை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பவேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற மகளையே நரபலி கொடுத்த கொடூர தந்தையின் இச்செயல் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.