மோடியின் குஜராத் அரசியல் - ஓலங்களும், உண்மைகளும்!
இந்திய சுதந்திரத்தின்போது மும்பை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த குஜராத் 1960ஆம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. 1960 முதல் 1996 அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் 5 முறை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு குஜராத் ஆட்பட்டிருந்தது.
ஜீவராஜ் நாராயண் மேத்தா
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜீவராஜ் நாராயண் மேத்தா குஜராத்தின் முதல் முதலமைச்சராக தேர்வானார். அதன் பின் 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 1975ல் முதன் முறையாக ஜனதா மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகள் இணைந்து காங்கிரஸ் அல்லாத முதல் அரசை பாபுபாய் பட்டேல் தலைமையில் அமைத்தன. 1990ல் பாஜக ஆதரவுடன் ஜனதாதஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது சிமன்பாய் படேல் முதலமைச்சரானார். அதனைத் தொடர்ந்து, 1995ல் பாஜக வெற்றிபெற்று கேஷூபாய் படேல் தலைமையில் ஓராண்டு ஆட்சி நடந்தது. அதன்பின், 1998ல் பாஜக வெற்றிபெற்று மீண்டும் கேஷுபாய் பட்டேல் முதலமைச்சரானார்.
நரேந்திர மோடி
2002ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று நரேந்திர மோடி முதன் முதலில் 14வது முதலமைச்சரானார். அடுத்து 2007 மற்றும் 2012 வரை மோடி தலைமையிலேயே ஆட்சி அமைந்தது. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது. இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
குஜராத் கலவரம்
பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பாஜக அமைச்சராக இருந்த மாயா கோட்னானி 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதே நாளில் சமன்புராவில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்பான குல்பெர்க் சொசைட்டியில் கலவர கும்பல் தாக்குதல் நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தது. இதில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வில் மட்டும் 69 பேர் கொல்லப்பட்டனர்.
கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற நரேந்திர மோடியும், பாஜகவினருமே இதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. கலவரக்காரர்களுக்கு குஜராத் காவல்துறையும் உதவியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதே நேரம் குஜராத் கலவரத்தை காரணம்காட்டி நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என விசா தடை விதிக்கப்பட்டது. இதனால் 2014-ல் பிரதமராகும் வரை அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதேபோல் 2002 முதல் 2012 வரை நரேந்திர மோடியை ராஜாங்க ரீதியாக பிரிட்டன் புறக்கணித்தது.
இதுகுறித்த வழக்கில் நரேந்திர மோடி எந்த குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கு அஹமதாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், 2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்றதால் அவருக்கு பதில் ஆனந்தி பென் பட்டேல் முதலமைச்சரானார். ஆனால் அதன்பின் போராட்டம் எழுந்ததால் விஜய் ருபானி முதலமைச்சரானார்.
விஜய் ரூபானி
முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு மோடி மாறினாலும் குஜராத்தின் நிர்வாகத்தை அவரும், கட்சியை அமித் ஷாவும்தான் டெல்லியிலிருந்து நிர்வகித்தார்கள். ஆனந்தி பென் பாட்டீலும் விஜய் ரூபானியும் தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. மோடியும் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ அதன்படியும் குஜராத் நிர்வாகம் நடக்கவில்லை. மாநிலத்தின் துடிப்பான பொருளாதாரம் நலிந்தது. வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் அமைதியிழந்தனர். எதற்கெடுத்தாலும் டெல்லியில் கேட்டு செயல்படும் முதல்வர் விஜய் ரூபானியை குஜராத்திகள் விரும்பவில்லை.
குஜராத் பாணி நிர்வாகத்தைத் தருவோம் என்று பிரச்சாரம் செய்துதான் 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் மோடி. அவருடைய ஆட்சிக்காலத்தில் தொழில்துறை, வேளாண்துறை, அடித்தளக்கட்டமைப்புத் துறைகளில் குஜராத் நல்ல வளர்ச்சி கண்டது. தொழிலதிபர்கள் தொழில்தொடங்க ஏற்ற மாநிலமாகக் குஜராத் திகழ்ந்தது. முதல்வர் அலுவலகம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விரைவுபடுத்தியது. 2015-ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்ற படேல் சமூக மக்களின் போராட்டம் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்த படேல் சமூக வாக்குகளை இழக்க நேரிட்டது.
பூபேந்திர படேல்
அதன்அடிப்படையில், குஜராத்தின் கிராமப்புற பகுதிகளில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. நகர்புறங்களில் பாஜகவின் செல்வாக்கைக் குறைத்தது. அடுத்து 2017-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், நிறைய தொகுதிகளில் கிராமப் புறங்களில் காங்கிரஸ் வென்றது. 2015-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றி 2017 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, பாஜக எழுந்துகொள்வதற்கு போதுமானதாக இருந்தது. மேலும், தன்னுடைய செயல்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்துகொண்டது.
முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி விலகியதை அடுத்து, 2021 செப்டம்பர் 13ம் தேதி முதல்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல். அதன்பின் 2022 அக்டோபர் 30-ம் தேதி, சாத் பூஜை விழாவின்போது 150 வருட பழைமையான, புதுப்பிக்கப்பட்ட மோர்பி கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில், 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக, முறையான தரம் சரிபார்ப்பு இல்லாமல் அவசர அவசரமாகப் பாலம் திறக்கப்பட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழ, பாலத்தைப் புதுப்பித்த `ஓரேவா' நிறுவனத்தின் முக்கிய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். சம்பவம் நடந்தபோது பிரதமர் மோடி குஜராத்தில்தான் இருந்தார். உடனடியாக அவர் முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் பாஜகவிற்கு பேரிடியாக அமைந்தது.
மோர்பி பால விபத்து
அதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற 2022 சட்டச்சபை தேர்தலில், மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 157 தொகுதிகளில் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மாநில முதல்வராக இருந்த பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 7-வது முறையாக அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. சமீபத்தில், பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.
மொத்தமாக, இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. இதில் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு அப்போதைய மோடி அரசுதான் காரணம் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் முதல் பாகம் வெளியான உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
எத்தனை விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், 7 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துவரும் கட்சிக்குச் சலிக்காமல் வாக்களித்திருக்கிறார்கள் குஜராத் மக்கள்.