மகளை வாயில் கவ்விய சிறுத்தை - துணிச்சலாக சண்டையிட்டு காப்பாற்றிய தந்தை!
சிறுத்தையுடன் சண்டையிட்டு தந்தை ஒருவர் 2 மகள்களையும் காப்பாற்றியுள்ளார்.
மகளை கவ்விய சிறுத்தை
குஜராத், புல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கித் தாமோர். இவருக்கு, வர்ஷா மற்றும் காவ்யா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, அதிகாலை வேளையில், இவர் தனது இரு மகள்களுடன் தூங்கி வந்துள்ளார்.
முன்னதாக இரவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே சென்று வந்த அங்கித் கதவை மூட மறந்து திறந்து வைத்தே தூங்கியுள்ளார். இதனால் திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. தூங்கிக்கொண்டிருந்த 3 வயது மகளான வர்ஷாவை தனது வாயில் கவ்விக்கொண்டது.
தந்தை துணிகரம்
இதற்கிடையில் விழித்துக்கொண்ட அங்கித் அதிர்ச்சியடைந்து தனது மகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவிடக் கூடாது என்ற நோக்கில் கதவின் அருகில் நின்றுள்ளார். இதனால் சிறுத்தை வர்ஷாவை விடுவித்து மற்றொரு மகளான காவ்யாவை நோக்கி சென்றது. தொடர்ந்து,
ஒரு துணியை எடுத்து சிறுத்தையின் வாய் பகுதியை நோக்கி வீசி போக்கு காட்டியுள்ளார். இதனைக் கண்டு பதறிய சிறுத்தை வெளியேறி காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. இதன் காரணமாக, இரு மகள்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள் இவர்கள் மூவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.