100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடி - அமைச்சரின் மகன் கைது
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடியில் குஜராத் மாநில பாஜக அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 நாள் வேலை திட்டம்
கிராமப்பகுதிகளில் வறுமையை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏரி, குளம், குட்டைகளை தூய்மைப்படுத்துவது, சாலைகளை சீரமைப்பது, நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குவது போன்ற வேலைகளை 100 நாட்களுக்கு வழங்கி அரசு ஊதியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் உள்ள தோஹாத் மாவட்டத்தின் சில தாலுகாக்களில், 100 நாள் வேலை திட்டத்தில் 250 கோடிக்கு மேல் பண முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
அமைச்சர் மகன் கைது
புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கடந்த 2021 ஜனவரி முதல், 2024 டிசம்பர் வரை சாலைகள், தடுப்பணைகள் அமைக்காமலேயே, அமைத்தது போல் கணக்கு காட்டி 35 நிறுவனங்களுக்கு போலி பில்கள், போலி பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, 75 கோடி ரூபாய் மோசடியாக பணம் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து மற்றும் வேளாண் அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடுக்கு சொந்தமான நிறுவனமும் கோடிக்கணக்கில் முறைகேடாக பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, பல்வந்த் கபாடை நேற்று காவல்துறையினையே கைது செய்தனர். பல்வந்த் கபாடின் சகோதரர் கிரண் கபாட் தலைமறைவாகியுள்ளார்.