7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் சுருண்டது சென்னை - சஹா அரைசதம் எடுத்து அசத்தல்!
15வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு டெவன் கான்வே 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய மொய்ன் அலி 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜெகதீஷன் – ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி, குஜராத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த சிவம் துபே டக் அவுட்டானர். கடைசி ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி 10 பந்துகளில் வெறும் 7 ரன்களும், இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய ஜெகதீஷன் 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து கொடுத்துததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.
முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை துவக்கியது குஜராத் அணி. மேலும் இரு பவுண்டரிகளை விளாசி சென்னையின் பவுலிங்கை நெருக்கடிக்கு ஆளாக்கினார் சஹா. முகேஷ் வீசிய 3வது ஓவரிலும் சஹா இரு பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். சாண்ட்னர், சிம்ரஜித் சிங் என அனைத்து பவுலர்களின் பந்தையும் வெளுத்து வாங்கினார் சஹா.
5-வது ஓவர் வரை நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில், சாண்ட்னர் இரு பவுண்டரி விளாசி அதிரடி பக்கம் திரும்பினார்.ஆனால் இளம் வீரர் மதீஷ பதிரனா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆகி நடையைக் கட்டினார் கில். அடுத்து வந்த மேத்யூ வேட் அதிரடியாக ஆட்டத்தை துவங்க, ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் இந்த கூட்டணியால் வெகு நேரம் நீடிக்க இயலவில்லை.
மொயின் அலி பந்துவீச்சில் மேத்யூ அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதிரடியாக ஆடத் துவங்கிய அவரும் மதிஷா பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். துவக்கத்தில் அதிரடியாக ஆடிய சஹா, உரிய பார்ட்னர் இல்லாமல் தன் வேகத்தை குறைத்தார்.
இதனால் 42 பந்துகளில் தான் அவரால் அரைசதம் கடக்க முடிந்தது.அடுத்து வந்த மில்லருடன் இணைந்து சஹா நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டி அசத்தியது குஜராத் அணி.
முதல் போட்டியிலேயே அற்புதமாக பந்துவீசிய மதிஷா பரிதனா 3 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து பாண்டியா, மேத்யூ வேட் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை அசால்டாக வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி.