ஜெர்மனி பெர்லின் பூங்காவில் கின்னஸ் சாதனை படைத்த கொரில்லா
ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் வசிக்கும் ஃபாதூ என்ற பெண் கொரில்லா தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
இதன் மூலம் உலகின் மிக வயதான கொரில்லா என்ற பெருமையை பெற்று, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக காடுகளில் வாழும் கொரில்லாக்கள் சுமார் 35 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றனர்.

ஆனால் மனிதப் பராமரிப்பில் இருக்கும் ஃபாதூ காடுகளில் வாழும் கொரில்லாக்களை விட இரண்டு மடங்கு அதிக காலம் வாழ்கிறது.
பூங்கா நிர்வாகத்தின் சிறந்த உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் அன்பான கவனிப்பே இதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஃபாதூவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளால் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
1957ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் பிறந்ததாக கருதப்படும் ஃபாதூ, 1959ஆம் ஆண்டு பெர்லின் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
67 ஆண்டுகளாக இந்த பூங்காவில் வசித்து வருகிற ஃபாதூவிற்கு முதுமை காரணமாக தற்போது மென்மையான உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
செவித்திறன் மற்றும் பார்வை சற்று குறைந்தாலும், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை மிக அருகில் சென்று பார்ப்பதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளது.