மகளின் கண்முன்னே விரட்டி தாக்கிய காட்டு யானை - தாய் பரிதாப பலி!
காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காட்டு யானை தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள் என வனவிலங்குகளின் தாக்குதலில் மக்கள் உயிரிழப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கூடலூர் வட்டம் பந்தலூரை அடுத்த கோரஞ்சால் என்ற பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் அஷ்வதி என்ற மகளும் உள்ளார். நேற்று சுமித்ரா தனது மகளை கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்காக சென்றுள்ளார்.
இருவரும் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அப்பகுதியில் இருந்த காட்டு யானை இவர்களை தாக்கியுள்ளது. இதில் மகள் அஷ்வதிக்கு சிறிது காயங்கள் ஏற்பட்டு உள்ளது.
தாய் உயிரிழப்பு
இந்நிலையில் தாய் சுமித்ராவை யானை விரட்டி தாக்கியபோது அவரின் இதயத்தில் யானையின் தந்தம் தாக்கியதில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அறுவைச் சிகிச்சைக்காக அவரை கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.