ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்... கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்
ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 65, மார்க்ரம் 56 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளை ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கைப்பற்றி அசத்தினார். விர்த்திமான் சஹா 68 ரன்கள் விளாசிய நிலையில் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.
மார்கோ ஜென்சன் வீசிய அந்த ஓவரில் ராகுல் திவேடியா - ரஷித் கான் ஜோடி 4 சிக்ஸர்களை விரட்டி வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. சிறப்பாக விளையாடிய திவேடியா 40 ரன்களும், ரஷித் கான் 31 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது.