பைனலுக்குள் நுழைந்த குஜராத் அணி... பவுலர்களால் தோற்றுப்போன ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின. இதனிடையே முதல் பிளே ஆஃப் போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் 89, கேப்டன் சஞ்சு சாம்சன் 47, படிக்கல் 28 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 189 ரன்கள் என்ற இலக்குடன் களம் கண்ட குஜராத் அணியில் டேவிட் மில்லர் 68, சுப்மன் கில் 35, மேத்யூ வேட் 35, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் விளாச 19.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்ற அணி என்ற பெருமை குஜராத் அணிக்கு கிடைத்துள்ளது.
அதேபோல் இப்போட்டியில் தோல்விகண்ட ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு சென்றுள்ளது. 2வது பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு - லக்னோ அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் இதில் வெற்றி பெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.