கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்க விட்ட ராகுல் திவேடியா - பஞ்சாப்பை பொளந்துகட்டிய குஜராத்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்த 16வது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 64, ஷிகர் தவான் 35 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
What a Finish By Tewatia ??
— Alen Joseph (@alen_Joseph_) April 8, 2022
Nail Biting Finish, Cricket at its best ?#Tewatia pic.twitter.com/cicEz2skAd
குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் பஞ்சாப் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். 96 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்த நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சன் 35 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தன் பங்குக்கு 27 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை பஞ்சாப் வீரர் ஒடியன் ஸ்மித் வீச அதனை ராகுல் திவேடியா எதிர்கொண்டார். கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ராகுல் திவேடியா அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.