அணி மாறியும் ராகுலுக்கு அதிர்ஷ்டமில்லை - ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் புதிதாக இந்தாண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோஅணியில் தீபக் ஹூடா அதிகப்பட்சமாக 55 ரன்களும், ஆயுஷ் பதானி 54 ரன்களும் விளாச லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி பயணித்த் குஜராத் அணியில் மேத்யூ வேட் 30, ஹர்திக் பாண்ட்யா 33, டேவிட் மில்லர் 30, ராகுல் திவேடியா 40 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.