இந்த நேரத்தில் இது தேவையா? இளவரசர் ஹரிக்கு பெருகும் எதிர்ப்பு
பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசர் ஹரியின் பேட்டி வெளியாவதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. இளவரசர் ஹரியும் மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது பலரும் அறிந்ததே.
இளவரசர் ஹரியும், அவரது மனைவியான மேகனும் தொலைக்காட்சி பிரபலமான ஓபரா வின்ஃப்ரேக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். ஒளிவு மறைவற்ற அந்த பேட்டியில், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய மேகனும் ஹரியும் என்னென்ன சொன்னார்களோ என்ற விடயம் அரண்மனை வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அந்த பேட்டியை இருட்டடிப்பு செய்யும் விதமாக, மகாராணியாரும், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களும், ஹரியின் பேட்டி வெளியாகும் அதே மார்ச் 7ஆம் திகதி, அவரது பேட்டி வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளனர். இந்நிலையில், ஹரி மேகன் பேட்டிக்கு மற்றொரு பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இம்முறை, அந்த பேட்டிக்கு ராஜ குடும்ப நிபுணர்களும், ராஜ குடும்ப ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மகாராணியாரின் கணவரும், ஹரியின் தாத்தாவுமான இளவரசர் பிலிப் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இந்த பேட்டி தேவையா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆகவே, அந்த பேட்டியை ஒளிபரப்புவதை ஒத்திவைக்குமாறு தொலைக்காட்சி நிறுவனத்தை வலியுறுத்த ஹரி மேகனை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளர்கள்.
