குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : டிஎன்பிஎஸ்சி
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தவறாக விவரங்களை தெரிவித்தவர்கள் அதனை மாற்றிக் கொள்ள டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
இதில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்கும் போது சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அதனை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை பரிசீலித்த டிஎன்பிஎஸ்சி அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை ஒருமுறை பதிவு செயல் மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.