சாப்பாடு ருசியாக இல்லை.. திருமண விழாவில் குறை கூறிய இளைஞர் - கடைசியில் நேர்ந்த கதி
திருமண விழாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமண விழா
உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள சஹாவர் பகுதியில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற இளைஞர் கலந்து கொண்டார். அப்போது திருமண விழாவில் இரவு விருந்து பரிமாறப்பட்டது.
இதனைச் சாப்பிட்ட அருண்குமார் உணவு ருசியாக இல்லை என்றும் தரமாக இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனைக் கேட்ட பெண் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து இதைபற்றி அருண் பேசவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுட்டுக்கொலை
அப்போது திடீரென மணமகளின் மாமா விஜயகுமார் என்பவர், துப்பாக்கியை எடுத்து அருண்குமாரை நோக்கி சரமாரியாகச் சுட்டார்.இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த அவர்கள் விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.