தமிழ் பெண்ணை காதலித்து கரம்பிடித்த பிரான்ஸ் மாப்பிள்ளை - சேலை, வேட்டி அணிந்து வந்த பிரான்ஸ் நாட்டினர்!
காதல் மலர்ந்தது
சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி படையாச்சி தோட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சுகந்தி. இத்தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. இவர் பெண் பொறியாளர். இவர், சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், அந்நிறுவனத்தில் வேலை செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் குறித்து கிருத்திகா, தன் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.
தமிழர் பாரம்பரிய முறையில் திருமணம்
பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்துவிட்டனர். இதனையடுத்து, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்து கொண்டனர். கடந்த திங்கட்கிழமை இத்திருமணம் நடந்தது. தமிழ் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக இத்திருமணம் நடந்தது.
வேட்டி - சட்டை, சேலை அணிந்த வெளிநாட்டினர்
திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். இது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.
தமிழர் உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை பிரான்ஸ் நாட்டினர் விரும்பி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.