"கனவெல்லாம் பலிக்குதே, கண் முன்னே நடக்குதே" - சாதாரண மளிகை கடைக்காரரின் மகன் இன்று இந்திய கிரிக்கெட் அணியில் !
சாதாரண மளிகை கடைக்காரரின் மகன் இன்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் வரும் ஜனவரி 14ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த வீரர்கள் இருந்த போதும், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் சித்தார்த் யாதவின் பின்னணி மட்டும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கோட்கான் என்ற சிறிய கிராமத்தில் சாதாரண மளிகை கடை நடத்தி வரும் ஸ்ரவன் யாதவின் மகன் சித்தார்த் யாதவ்.
தனது மகனுக்கு கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தையும் அவரது திறமையையும் கண்ட ஸ்ரவன், அவருக்கு 8 வயதில் இருந்தே பயிற்சி கொடுத்துள்ளார்.
பயிற்சி என்றால், முறையான கிரிக்கெட் பயிற்சியாளரை வைத்து இல்லாமல் தினமும் தந்தையே மகனுக்கு பந்துவீசுவார், அப்படி இல்லையென்றால் மகனை பந்துவீச சொல்லி, பேட்டிங் செய்வார்.
இப்படி தினமும் 4 மணி நேரம் வரை பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் சித்தார்த் யாதவ்.
பள்ளி, கல்லூரி, மாவட்டம் என சிறிது சிறிதாக அசத்தி வந்த சித்தார்த், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி ஒரு இரட்டை சதம் மற்றும் 5 சதம் அடித்து விளாசினார்.
இதனால் தற்போது இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். ரோகித் சர்மாவிடம் பல ஆலோசனைகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.